பா.ஜனதாவில் இருந்து அனில் அந்தோணி, கறிவேப்பிலை போல தூக்கி எறியப்படுவார் - சகோதரர் வருத்தம்


பா.ஜனதாவில் இருந்து அனில் அந்தோணி, கறிவேப்பிலை போல தூக்கி எறியப்படுவார் - சகோதரர் வருத்தம்
x

கோப்புப்படம்

பா.ஜனதாவில் இருந்து அனில் அந்தோணி, கறிவேப்பிலை போல தூக்கி எறியப்படுவார் என்று அவரது சகோதரர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்-மந்திரியுமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, காங்கிரசில் இருந்து விலகி நேற்று முன்தினம் பா.ஜனதாவில் இணைந்தார்.

இது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அனில் அந்தோணியின் முடிவு குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அவரது தம்பி அஜித் அந்தோணி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பா.ஜனதாவில் இணைவது குறித்து குடும்பத்தினரிடம் அனில் அந்தோணி எதுவும் தெரிவிக்கவில்லை. டி.வி.யில் செய்தியை பார்த்தபோது எங்களுக்கே பேரதிர்ச்சியாக இருந்தது. அப்பா (ஏ.கே.அந்தோணி) இதைப்பார்த்துவிட்டு வீட்டின் ஒரு மூலையில் மிகுந்த வேதனையுடன் இருந்ததை கண்டேன். என் வாழ்நாளில் அவரை இவ்வளவு பலவீனமாக நான் பார்த்ததே இல்லை. அவர் கண்ணீர் விடவில்லை, அவ்வளவுதான்' என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் அவர், 'பா.ஜனதாவில் இணைவது அவருக்கு நல்லது என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், அவரை பா.ஜனதாவினர் தற்காலிகமாக பயன்படுத்தி விட்டு கறிவேப்பிலை போல் தூக்கி எறிவார்கள் என்று மீண்டும் மீண்டும் கூறுவேன்' என்றும் கூறினார். முன்னதாக அனில் அந்தோணி பா.ஜனதாவில் இணைந்தது குறித்து தந்தை ஏ.கே.அந்தோணியும் மிகுந்த வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story