5 நாட்களாக மின்தடை; துணை மின் நிலையத்தை பூட்டி கிராம மக்கள் போராட்டம்!


5 நாட்களாக மின்தடை; துணை மின் நிலையத்தை பூட்டி கிராம மக்கள் போராட்டம்!
x

புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, உள்ளூர் மக்கள் அப்பகுதி துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தின் ஹுக்மாவாலி கிராமத்தில் கடந்த ஐந்து நாட்களாக மின் வினியோகம் இல்லை என புகார் எழுந்தது.

இந்த நிலையில் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, உள்ளூர் மக்கள் அப்பகுதி துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் துணை மின் நிலையத்தை மூடி யாரும் உள்ளே செல்லாதவாறு போராட்டம் நடத்தினர்.

மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மின்விநியோகம் வழங்கப்படாவிட்டால், மின் நிலையத்துக்கு தீ வைக்கப்படும் என்று எச்சரித்தனர். அவர்கள் மின் நிலையத்தின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய கிராம மக்கள் கூறியதாவது, பஞ்சாயத்து தரப்பில் 14 ஏக்கர் நிலம், 220 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைத்திட வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பலனாக, 24 மணி நேரமும் கிராமத்திற்கு மின்விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்விநியோகம் தடைபட்டு வருகிறது. இரவு நேரங்களில் சுத்தமாக மின் விநியோகம் இல்லை. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். ஆனாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை.

இதன் காரணமாகவே துணை மின் நிலையத்தை பூட்டு போட்டு மூட வேண்டிய சூழல் இப்போது உருவாகியுள்ளது என்று கூறினர்.

அதிகாரிகள் தரப்பில் அப்பகுதி இளநிலை பொறியாளர் பவன் குமார் கூறுகையில், இங்கு மழை காரணமாக டிரான்ஸ்பார்மர் சேதமடைந்துள்ளது. இதனால் தான் மின்விநியோகம் தடைப்பட்டு வருகிறது.

மின் வினியோகத்தை சீரமைப்பதற்கான அனைத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் புதிய டிரான்ஸ்பார்மர் விரைவில் கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.


Next Story