ஆந்திர பிரதேசம்: குடிபோதை ஆசாமியை காலால் எட்டி உதைத்த போக்குவரத்து காவலர் சஸ்பெண்டு
ஆந்திர பிரதேசத்தில் குடிபோதை ஆசாமியை போக்குவரத்து காவலர் காலால் எட்டி உதைத்த வீடியோ வெளியான நிலையில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
திருப்பதி,
ஆந்திர பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த ஆசாமியை போக்குவரத்து காவலர் ஒருவர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வைரலானது. இந்நிலையில், நடந்த சம்பவம் பற்றி திருப்பதி போக்குவரத்து டி.எஸ்.பி. கடம் ராஜூ கூறும்போது, ஆந்திர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று ஆர்.சி. புரம் சாலை வழியே சென்று கொண்டிருந்தது.
அதில் குடிபோதை ஆசாமி ஒருவர் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். தன்னை பேருந்துக்குள் ஏற ஓட்டுனர் விடவில்லை என அந்த ஆசாமி வாக்குவாதம் செய்துள்ளார்.
குடிபோதை ஆசாமியால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து கான்ஸ்டபிள் இந்த விவகாரத்தில் சமரசம் பேச சென்றுள்ளார். ஆனால் அந்த ஆசாமி, கான்ஸ்டபிளை தகாத வார்த்தைகளால் பேசி, கூச்சல் போட்டுள்ளார் என தெரிவித்து உள்ளார்.
இதுபற்றிய வீடியோவில், குடிபோதையில் காணப்படும் ஒரு நபரை சாலையோரம் போக்குவரத்து காவலர் ஒருவர் அடிக்கும் காட்சிகள் உள்ளன. அந்த நபரை உள்நோக்கத்துடன் கான்ஸ்டபிள் அடிக்கவில்லை என டி.எஸ்.பி. கூறியுள்ளார்.
எனினும், வைரலான வீடியோவின்படி, போக்குவரத்து காவலர் அந்நபரை அடித்தது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். போக்குவரத்து காவலர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என்றும் டி.எஸ்.பி. கூறியுள்ளார்.