இந்தியாவுக்கு அகதியாக வந்து ரூ.20 கோடி போதை பொருள் கடத்திய ஆப்கானிஸ்தானியர்
இந்தியாவுக்கு குடும்பத்துடன் அகதியாக மருத்துவ விசாவில் வந்த ஆப்கானிஸ்தானியர் ரூ.20 கோடி போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானில் குடும்பத்துடன் வசித்து வந்த அகதி ஒருவர் போரால் பாதிக்கப்பட்டு, ஐ.நா. அமைப்பின் அகதிகளுக்கான தூதரகம் வழியே அந்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
அவர் மருத்துவ விசாவில் இந்தியா வந்த நிலையில், தலைநகர் டெல்லியின் வசந்த்குஞ்ச் பகுதியில் வைத்து, குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு படையால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ரூ.20 கோடி மதிப்பிலான 4 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில் கும்பல் ஒன்று கடத்தலில் ஈடுபடுகிறது என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, குஜராத் போலீசாருடன் இணைந்து, டெல்லி குற்ற பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள் மற்றும் கடத்தல் கும்பல் பற்றிய விசாரணை நடந்து வருகிறது.