அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பு; திக் திக் அனுபவங்கள்...


அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பு; திக் திக் அனுபவங்கள்...
x

அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பு ஏற்பட்டபோது சம்பவ பகுதியில் இருந்த பக்தர்கள் திடுக்கிடும் அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர்.



ஸ்ரீநகர்,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு திரளான பக்தர்கள் கடுமையான குளிரிலும் சென்று கொண்டுள்ளனர். இந்த சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது.

மேகவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 48 பேர் காயமடைந்து உள்ளனர் என காஷ்மீரின் கந்தர்பால் பகுதியை சேர்ந்த தலைமை மருத்துவ அதிகாரி ஏ. ஷா கூறியுள்ளார்.

தொடர்ந்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் இன்று காலை மீண்டும் மீட்பு பணியை தொடர்ந்து உள்ளனர். 6 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது.

அதனுடன், அவர்களை உடனடியாக பணிக்கு வரும்படியும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி வனத்தின் மலைபிரதேச பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெருமழை கொட்டியுள்ளது.

இதில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேற்றில் சில வாகனங்கள் சிக்கி கொண்டன. கார், ஜீப் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன. இதனை அடுத்து, வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், மேகவெடிப்பு ஏற்பட்டபோது அந்த பகுதியில் இருந்த பக்தர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு ஏற்பட்ட திடுக்கிடும் அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

உ.பி.யின் ஹர்தோய் நகரை சேர்ந்த தீபக் சவுகான் என்பவர் கூறும்போது, நெரிசலான சூழல் காணப்பட்டது. ஆனால், ராணுவத்தினர் பெருமளவில் ஆதரவாக செயல்பட்டனர். போடப்பட்டிருந்த பந்தல்கள் பல நீரில் அடித்து செல்லப்பட்டன என கூறியுள்ளார்.

மராட்டியத்தில் இருந்து வந்த சுமித் என்ற பக்தர் கூறும்போது, மேகவெடிப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில், பெரிய, பெரிய கற்கள் உருண்டோடி வந்தன. நாங்கள் மேகவெடிப்பு சம்பவத்திற்கு 2 கி.மீ. தொலைவில் இருந்தோம் என கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு பக்தர் கூறும்போது, மேகவெடிப்பு ஏற்பட்டபோது, அதனை எங்களால் நம்பமுடியவில்லை. சிறிது நேரத்திற்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்தது. நாங்கள் ஒரு ஏழெட்டு பேர் இருப்போம். கடவுள் போல்நாத் கருணையால் நாங்களனைவரும் பிழைத்து விட்டோம்.

எனினும், மக்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளை நாங்கள் கண்டோம். எங்களுக்கு ஏற்பட்ட ஓர் அதிர்ச்சியான அனுபவமது என அவர் கூறியுள்ளார்.

மேகவெடிப்பு ஏற்பட்ட 10 நிமிடங்களுக்குள், 8 பேர் உயிரிழந்து விட்டனர் என தகவல் வந்தது. நீரில் எண்ணற்ற கற்கள் அடித்து வரப்பட்டன. அமர்நாத் புனித பயணத்திற்காக 15 ஆயிரம் பக்தர்களுக்கும் கூடுதலானோர் வந்தனர்.

கனமழை பெய்தபோதும் தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர் என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 15 ஆக உள்ளது. 48 பேர் காயமடைந்து உள்ளனர். பக்தர்கள் முகாம்களில் தங்கியிருக்க அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.


Next Story