தூத்துக்குடி துறைமுக பகுதியில் 6 வழிச்சாலைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி கட்காரி


தூத்துக்குடி துறைமுக பகுதியில் 6 வழிச்சாலைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி கட்காரி
x

தூத்துக்குடி துறைமுக பகுதியில் 6 வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

6 வழிச்சாலை

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

புதிய தேசிய நெடுஞ்சாலை 138-ல் தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்த 5.16 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தற்போது ரூ.200 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு இணையாக...

மேலும் செய்தி நிறுவனத்துக்கு கட்காரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'வருகிற 2024-ம் ஆண்டுக்குள், அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவில் நெடுஞ்சாலைகள் அமைந்திருக்கும். அதற்காக ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. அதில் நாடு முழுவதிலும் குறுக்கிலும் நெடுக்கிலும் நடக்கும் பசுமை விரைவுவழிச் சாலைப் பணிகளும் அடக்கம்.

ரெயில்வே மேம்பாலங்கள்

இந்த ஆண்டில் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கான நிதி ஒதுக்கீடு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும்.

கைலாச மானசரோவர் நெடுஞ்சாலை திட்டப்பணிகள் 93 சதவீதம் நிறைவடைந்து விட்டன.

35 ஆயிரம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை

இந்த நெடுஞ்சாலைப் பணி முடிவடையும்போது, கைலாச மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்கள் கடுமையாக மலையேற்றம் செய்ய வேண்டியிருக்காது. யாத்திரை காலமும் பல நாட்கள் குறையும்.

நாட்டின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டமான 'பாரத்மாலா பரியோஜனா'வில் 580 மாவட்டங்களை இணைத்து சுமார் 35 ஆயிரம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

'பாரத்மாலா' 2-வது கட்டம்

பாரத்மாலா 2-வது கட்ட தொடக்கத்தில், சுமார் 5 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாரத்மாலா 2-வது கட்டத்துக்கு மத்திய மந்திரிசபை விரைவில் ஒப்புதல் அளிக்கும். அப்போது, நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகள் மேலும் வேகம் பெறும்.'

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story