கே.சி.வேலி, எச்.என்.வேலி திட்டத்திற்காக ரூ.429 கோடி நிதி ஒதுக்கீடு
கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் 2-வது கட்ட கே.சி.வேலி, எச்.என்.வேலி திட்டத்திற்காக ரூ.429 கோடி நிதி ஒதுக்கீடு ெசய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
பட்ஜெட் தாக்கல்
2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். அதில் கூட்டுறவு துறை மற்றும் சில துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அவர் பேசியதாவது:-
* குறுகிய கால வட்டியில்லா கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.
* 3 சதவீத வட்டியுடன் கூடிய நீண்ட கால மற்றும் குறிப்பிட்ட கால கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்வு.
* விவசாயிகள் கட்டும் குடோனுக்காக ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கான வட்டி மானியம் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய பணிகளுக்காக வேன்கள் வாங்க 4 சதவீத வட்டியில் ரூ.7 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
*பூக்கள், பழங்கள், காய்கறி விளைவிக்கும் விவசாயிகளுக்காக மாநிலத்தில் 50 இடங்களில் சிறிய குளிரூட்டப்பட்ட குடோன்கள் அமைக்க திட்டம்.
*நாட்டிலேயே முதல் முறையாக விவசாய விளை பொருட்களுக்கான ஆன்லைன் மார்க்கெட் வசதியை அமைத்திட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
*ஏ.பி.எம்.சி. மார்க்கெட் சட்டம் உள்பட விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற அரசு முடிவு செய்துள்ளது.
* விவசாய சந்தைகளில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறந்தால் அவர்களின் இறுதிச்சடங்கிற்காக அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு.
நீர் வளம்
*முடியும் தருவாயில் மற்றும் மெதுவாக நடந்து வரும் நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு.
*பெலகாவி, தாவணகெரே, பல்லாரி, ஹாவேரி, கதக், பீதர், உத்தர கன்னடா, விஜயநகர், கொப்பல், கலபுரகி, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.770 கோடி செலவில் நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப திட்டம்.
*எத்தினஒலே திட்டத்தை விரைந்து முடித்து கோலார், சிக்பள்ளாப்பூர், ராம்நகர், பெங்களூரு புறநகர் மற்றும் துமகூரு மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க முன்னுரிமை.
*பத்ரா மேலணை திட்டத்தை மத்திய அரசு தேசிய திட்டமாக அறிவித்து ரூ.5,300 கோடி நிதியை ஒதுக்கியது. ஆனால் அதற்கு இன்னும் ஆவன செய்யவில்லை. அதனால் விரைவில் அந்த நிதியை விடுவித்து பணிகளை தொடங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
கிருஷ்ணா மேலணை
*கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்துக்காக மகதாயி நதியில் இருந்து 3.90 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை விடுவிக்க மத்திய நீர் ஆணையம் மற்றும் மகதாயி நீர் பங்கீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அந்த பணிகள் இன்னும் முடியவில்லை. அதனால் அந்த பணியை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
*கிருஷ்ணா மேலணை திட்டம், சன்னதி நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தப்படும்.
*ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன் பேசி அவர்களின் அனுமதியோடு கொப்பல் மாவட்டத்தில் நவலே அணை கட்டி முடிக்கப்படும்.
*3-வது கட்ட கிருஷ்ணா மேலணை திட்டத்திற்காக 130 டி.எம்.சி. தண்ணீர் வழங்க கிருஷ்ணா நதி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதை பயன்படுத்தி அந்த திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காண்டிராக்டர்களுக்கான நிலுவை தொகை
*சிறிய நீர்ப்பாசன துறையில் நடைபெற்று வரும் பணிகளுக்காக ரூ.12,729 கோடி நிதி படிப்படியாக விடுவிக்கப்படும்.
*முந்தைய ஆட்சியில் காண்டிராக்டர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நிலுவை தொகை ரூ.2 ஆயிரம் கோடியை இந்த அரசு வழங்கும். அதற்கு முன்னதாக அதன் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்.
*கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் 2-வது கட்ட கே.சி.வேலி மற்றும் எச்.என்.வேலி திட்டத்திற்காக ரூ.429 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் அந்த 2 மாவட்டங்களிலும் 296 நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
மேற்கண்டவாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.