பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம்: மத்திய அரசு அதிரடி
அரசு வேலை தேடி சென்ற பெண் ஒருவர் சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை தொடர்ந்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திரா நரைன் என்பவரை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
போர்ட் பிளேர்,
அந்தமான் நிகோபர் தீவின் தலைமை செயலாளராக பதவி வகித்தவர் ஜிதேந்திரா நரைன். இந்த நிலையில், அவர் மீது 21 வயது பெண் ஒருவர் சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை தொடர்ந்து அவரை மத்திய அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (யூனியன் பிரதேச பிரிவு) அஷுதோஷ் அக்னிஹோத்ரி கூறும்போது, 1990-ம் ஆண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான மற்றும் அந்தமான் நிகோபர் தீவின் தலைமை செயலாளரான ஜிதேந்திரா நரைனை, பெண் ஒருவர் சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் அடிப்படையில் உடனடியாக சஸ்பெண்டு பட்டியலில் வைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
ஜிதேந்திராவின் பதவியை கவனத்தில் கொள்ளும்போது, பெரிய அளவில் தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்க கூடிய சாத்தியமுள்ளது என்ற சூழலில், சட்டப்படி உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.
பெண்களின் கண்ணியம் தொடர்புடைய விவகாரங்களில், ஒழுங்கீனத்துடன் நடந்து கொள்ளும் அதிகாரிகள், அவர்களது பதவி மற்றும் அந்தஸ்து ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொள்ளாமல், பூஜ்ய சகிப்பு தன்மையுடன் நடவடிக்கையை மத்திய அரசு உறுதி செய்யும்.
நரைன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்தமான் நிகோபர் போலீசார் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று தனியாக அமைக்கப்பட்டு, குற்ற வழக்காக இதனை எடுத்து விசாரிக்க உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் ரிஷி என்ற மற்றொரு நபர் மீதும் பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அரசு வேலை தேடி சென்ற இடத்தில் பெண்ணுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. ஓட்டல் உரிமையாளர் ஒருவரின் வழியே 2 பேரையும் அந்த பெண் சந்தித்து உள்ளார்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே என இரண்டு முறை இரவில் அந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இதன்படி, ரிஷி பெயரில் பதிவு செய்யப்பட்ட காரில் நரைன் வீட்டுக்கு பெண்ணை இருவரும் அழைத்து சென்றுள்ளனர்.
அதன்பின், அந்த பெண்ணுக்கு மதுபானம் வழங்கியுள்ளனர். அதனை அவர் மறுத்து உள்ளார். இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த விவகாரம் பற்றி வெளியில் கூறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியும் உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
டெல்லியில் உள்ள நிதி கழகத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைவராக நரைன் உள்ளார். அவர், பெண் கூறிய குற்றச்சாட்டை மறுத்து உள்ளார்.