அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் டெல்லியில் இன்று ஆலோசனை
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் மேற்கொண்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 2 நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில் பங்கேற்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு டெல்லி சென்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் மேற்கொண்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்படும். அதோடு வெளியாக இருக்கும் இறுதி வாக்காளர் பட்டியல், 25-ந் தேதி நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தினம் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் கமிஷனர்கள் அனுப் சந்திரபாண்டே, அருண்கோயல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.