துணை சபாநாயகர் பதவியை எங்களுக்கு ஒதுக்குங்கள்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங். கோரிக்கை
நாடாளுமன்ற இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் நாளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மொத்தம் 19 அமர்வுகளாக ஆகஸ்ட் 12-ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறும்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் ஒரு தலைவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க முயற்சி செய்கின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதேபோல் நீட் வினாத்தாள் கசிவு, ரெயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் மாநிலம் சார்ந்த பிரச்சினைகள், பொதுவான பிரச்சினைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக கூறினர். குறிப்பாக, மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப அனுமதிக்கும்படி காங்கிரஸ் தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த முறை பிரதமர் மோடி உரையாற்றியபோது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், அதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என கூறினார்.
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் அரசாங்கம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. ஆந்திராவில் சட்ட மீறல் அதிகரித்திருப்பதால் ஜனாதிபதி ஆட்சிதான் ஒரே தீர்வு என்றும் கூறியது.
'கன்வாரியா' யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர்கள் தெரியம்படி பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என உத்தரபிரதேச அரசு பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவு குறித்த பிரச்சினையை சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ் எழுப்பியதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, அனைத்துக் கட்சி கூட்டத்தில் 44 கட்சிகளைச் சேர்ந்த 55 தலைவர்கள் பங்கேற்றதாகவும், கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
'நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பொறுப்பு ஆகும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு விவாதிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது' என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi