அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
x

வங்கிகளில் செல்வந்தர்களின் கடன் தினமும் ரூ.375 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு:-

தூக்கி எறிய வேண்டும்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கலபுரகி மாவட்டம் அப்சல்புராவில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:-

போரில் வெல்ல வேண்டுமெனில் நாம் போராடி தான் வெற்றி பெற வேண்டும். மகாத்மா காந்தி, செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்தை சுதந்திர போராட்டத்தால் முன்வைத்தார். இன்று நாட்டில் ஜனநாயகம், அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டுமெனில் இந்த மிக மோசமான பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். வளம், செழிப்பு, நிம்மதி இருக்க வேண்டுமெனில் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

தினமும் ரூ.375 கோடி தள்ளுபடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, நான் பேசிய பேச்சுக்கு பிரதமர் மோடியால் பதிலளிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு அனுபவம் இருந்தது. தலித், பின்தங்கிய, தொழிலாளர்களின் குரலாக நான் பேசினேன். அந்த மக்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பது நமக்கு தான் தெரியும். தான் பிரதமரானால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி கூறினார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா?.

இந்த பா.ஜனதா அரசு சாமானிய மக்களின் நலனுக்காக எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. நாட்டில் 45 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். செல்வந்தர்களின் ரூ.5.60 லட்சம் கோடியை வங்கிகளில் கடன் பெற்று செலுத்தவில்லை. இது யாருடைய பணம்?. வங்கிகளில் செல்வந்தர்களின் கடனை தினமும் ரூ.375 கோடி தள்ளுபடி செய்கிறார்கள். ஏழை மக்களின் பணத்தை பறித்து செல்வந்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

முழுவதுமாக தோல்வி

பசவண்ணரின் கொள்கைப்படி பா.ஜனதாவினர் நடந்து கொள்ள வேண்டும். இரட்டை என்ஜின் அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. கலபுரகி மக்கள் என்னை கைவிட்டாலும், சோனியா காந்தி என்னை கைவிடவில்லை.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.


Next Story