நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவது சந்தேகத்தை எழுப்புகிறது - காங்கிரஸ் கருத்து


நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவது சந்தேகத்தை எழுப்புகிறது - காங்கிரஸ் கருத்து
x

கோப்புப்படம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவது அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்தை எழுப்புவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.

இதை ஏற்ற சபாநாயகர் விவாதத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

அதற்கான விவாதம் இதுவரை நடக்காத நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி சந்தேகம் எழுப்பியுள்ளது.

மணிஷ் திவாரி எம்.பி.

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான மணிஷ் திவாரி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, எந்த மசோதாவோ, பிற அலுவல்களோ அவைக்கு கொண்டு வருவது முற்றிலும் நாடாளுமன்ற மரபு, உரிமை மற்றும் தார்மீகங்களை மீறுவது ஆகும்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை திட்டமிடுவதற்கான 10 நாள் கால அவகாசத்தை மசோதாக்களை நிறைவேற்ற பயன்படுத்த முடியாது.

நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நடந்துள்ள அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்திற்குரியவை.

ஆய்வு செய்ய வேண்டும்

எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு மக்களவை அல்லது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களின் சட்டப்பூர்வ தன்மையும், அவை சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டதா? இல்லையா? என்பதையும் நீதிமன்றத்தால் ஆய்வு செய்ய வேண்டும்.

மணிப்பூரில் நடந்ததும், அங்கு தொடர்ந்து நடப்பதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் பா.ஜனதா அரசு உள்ளது, மத்தியில் பா.ஜனதா அரசு உள்ளது. எனவே, யாராவது இதற்கு பொறுப்பேற்க வேண்டும்

மணிப்பூரின் மிகவும் மோசமான சூழல் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு பிரதமர் மோடி அறிக்கை அளிப்பார் என எதிர்பார்த்தோம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாடாளுமன்ற தொடர் தொடங்குவதற்கு முன், பிரதமர் மிகவும் கவலைப்படுத்தப்பட்ட கருத்தை வெளியிட்டார். அதன்பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பலமுறை அளிக்கப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானங்களை அவைத்தலைவர்கள் ஏற்கவில்லை.

வேறு வழி இல்லை

எனவே எந்த ஒரு அரசுக்கும் முக்கியமாக இருக்க வேண்டிய பொதுவாழ்வின் ஒழுக்கம், நன்னடத்தை மற்றும் பொறுப்புக்கூறல் என்ற கோட்பாட்டை அமல்படுத்துவதற்காக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதைத்தவிர எதிர்க்கட்சி கூட்டணிக்கு வேறு வழி இல்லை.

எனவே இந்த சூழ்நிலையில், மணிப்பூர் விவகாரத்துக்கு பதில் அளிக்காமல் இருக்க பிரதமர் முடிவு செய்தால், அது கேலிக்கூத்தாக இருக்கும் என்று மணிஷ் திவாரி தெரிவித்தார்.


Next Story