பீர், மதுபானங்களின் விலை கர்நாடகத்தில் கிடுகிடு உயர்வு


பீர், மதுபானங்களின் விலை கர்நாடகத்தில் கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 4:40 PM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் கர்நாடகத்தில் பீர், மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வருகிறது.

பெங்களூரு:

பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் கர்நாடகத்தில் பீர், மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வருகிறது.

கர்நாடக பட்ஜெட்

முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் 2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பத்திரப்பதிவு கட்டணம், கலால் வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டது. அதில் குறிப்பாக கலால் வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதாவது காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், அன்னபாக்ய திட்டத்தில் பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீட்டில் உள்ள உறுப்பினர்களை கணக்கிட்டு தலா 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதி உதவி, வீடுகளுக்கு மாதந்தோறும் தலா 200 யூனிட் இலவச மின்சாரம் உள்பட 5 வாக்குறுதிகளை அளித்திருந்தது.

இலவச பயணம்

அதன்பேரில் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டத்தை உடனே தொடங்கியது. மேலும் வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் உள்பட மீதமுள்ள 4 இலவச திட்டங்களையும் அமல்படுத்த கர்நாடக அரசு ஆயத்தமாகி வருகிறது. இந்த இலவச திட்டங்களுக்காக ரூ.52 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதனால் பட்ஜெட் தாக்கலின்போது எப்படியும் வரிகள் மற்றும் பல்வேறு அம்சங்களின் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில் கலால் வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

விலை உயர்வு

அதன்படி பிளாக் அண்ட் வைட் ரக மதுபானத்தின் குவாட்டர் விலை(180 மில்லி லிட்டர்) ரூ.621 ஆக உள்ளது. அதன் விலை இனி ரூ.700 ஆக உயருகிறது. ஜானி வாக்கர் பிளாக் லேபிள் ரக மதுபானத்தின் குவாட்டர் விலை தற்போது ரூ.1,700 ஆக உள்ளது. இதன் விலை இனி ரூ.1,770 ஆக உயர்கிறது. இதுபோல் பீர் விலைகளும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் 4 முதல் 5 நாட்களில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Next Story