புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை வழக்கம்போல் செயல்படும்; அரைநாள் விடுப்பை திரும்பப்பெற்ற டெல்லி எய்ம்ஸ்


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை வழக்கம்போல் செயல்படும்; அரைநாள் விடுப்பை திரும்பப்பெற்ற டெல்லி எய்ம்ஸ்
x

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அரைநாள் மூடப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

புதுச்சேரி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்துமத கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி பல்வேறு மாநிலங்கள் பொதுவிடுமுறை அறிவித்துள்ளன.

இதனிடையே, கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அரைநாள் மூடப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் நடைபெறும் என மருத்துவமனை தரப்பில் கோர்ட்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை எனவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதேபோல், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை மதியம் 2.30 மணிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, நாளை அறிவிக்கப்பட்டிருந்த அரைநாள் விடுப்பை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப்பெற்றது. மருத்துவமனை நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவித்துள்ளது.


Next Story