கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை


கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை
x

சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுவதால் ஒரே நாளில் பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடினர்.

பெங்களூரு:-

224 தொகுதிகளை கொண்ட சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடகத்தில் தலைவர்கள்

இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி நிறைவு பெற்றதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்கள். குறிப்பாக ஆளும் பா.ஜனதாவினர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதுபோல் காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்பதால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கர்நாடகத்தில் முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால், முன்னாள் பிரதமர் தேவேகவுடா 90 வயதிலும், தனக்கு உடல் நல பாதிப்பு இருந்தாலும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரதமர் மோடி ஊர்வலம்

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளை(திங்கட்கிழமை) மாலையுடன் நிறைவு பெற இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கர்நாடகத்தில் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது, தங்களது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி நேற்று பெங்களூருவில் திறந்த வாகனத்தில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார். அதாவது குஜராத்திற்கு அடுத்தபடியாக கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பெங்களூருவில் 26½ கிலோ மீட்டருக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

பிரதமர் மோடியை பார்க்க பெங்களூரு நகரவாசிகள் பல லட்சம் பேர் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர். பச்சிளம் குழந்தையுடன் ஒரு பெண், பிரதமர் மோடியை பார்க்க 2 மணிநேரத்திற்கும் மேலாக கூட்ட நெரிசலில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகும், பிரதமர் மோடி பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி, ஹாவேரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி பெங்களூருவில் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தி இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய இருக்கிறார்.

ஒரே மேடையில் ராகுல்-சோனியா

இதுபோல், சட்டசபை தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி நேற்று கர்நாடகம் வருகை தந்திருந்தார். தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சோனியா காந்தி பேசினார். அவருடன் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பங்கேற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். இதுதவிர பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தி பங்கேற்று பா.ஜனதாவையும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பேசி இருந்தார்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் செய்தார்கள். அதாவது பெலகாவி மாவட்டத்தில் அமித்ஷா முகாமிட்டு 2 ஊர்வலங்கள் மற்றும் 4 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். ஜே.பி.நட்டாவும் மண்டியா மாவட்டம் மத்தூர், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 2 இடங்களில் ஊர்வலம் நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்திருந்தார்.

யோகி ஆதித்யநாத் ஊர்வலம்

இதுதவிர உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக திறந்த வாகனத்தில் ஊர்வலம் சென்று ஆதரவு திரட்டினார். இதுதவிர முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்களும் நேற்று கர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். நடிகர் சுதீப் தேவனஹள்ளி மற்றும் தொட்டபள்ளாப்புராவில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஹாவேரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பங்கேற்று இருந்தார். காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவக்குமார் மைசூரு, மண்டியா, துமகூரு, ராமநகர் ஆகிய 4 மாவட்டங்களில் அனல் பறக்கும் பிரசாரம் செய்தார். எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா மைசூருவில் வருணா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

தேவேகவுடா குற்றச்சாட்டு

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா பெங்களூருவிலேயே தங்கி இருந்தார். பெங்களூரு நகருக்கு என்று தனியாக ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலுக்காக பெங்களூருவில் ஊர்வலம் சென்றாலும் பரவாயில்லை, சட்டசபை தேர்தலுக்காக இப்படி ஊர்வலம் செல்வது தேவையற்றது என்று தேவேகவுடா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர், மைசூருவில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், பெங்களூரு எலகங்கா, தாசரஹள்ளி தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்தும் சூறாவளி பிரசாரம் செய்திருந்தார். திறந்த வாகனத்தில் சென்றும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு

இதுபோல், ஒவ்வொரு கட்சிகளின் வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் பெற்று ஊழல் நடப்பதாக சுட்டிக்காட்டி பேசினார்கள். இதற்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களையும், பஜ்ரங்தள தடை விவகாரத்தை கையில் எடுத்தும், பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் ஆஞ்சநேயர் புகைப்படங்கள், கொடியுடன் பங்கேற்று தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.

கர்நாடகத்தில் இன்றும் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். பிரியங்கா காந்தி பெங்களூருவில் ஊர்வலம் செல்ல உள்ளார். பிரதமர் மோடியும் பெங்களூருவில் ஊர்வலம் செல்வதுடன் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி விட்டு, தனது 3 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story