18-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம்


18-ந்தேதி தொடங்கும்  நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம்
x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி 16-ந்தேதி (சனிக்கிழமை), அனைத்துக்கட்சி அவைத்தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்து உள்ளார்.

கடைசி கூட்டத்தொடர்

அதேநேரம் மறுநாள் (17-ந்தேதி) மாலையில் இதைப்போன்ற கூட்டத்துக்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக்கட்சிகளுக்கும் அவர் அழைப்பு அனுப்பி உள்ளார்.

மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அவரது தற்போதைய பதவிக்காலத்தின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். இது ஒருபுறம் இருக்க, அரசு சார்பில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் வழக்கமான கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி 17-ந்தேதி காலையில் நடத்துவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ராஜ்நாத் சிங் பங்கேற்பு

இதில் மழைக்கால கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டு, தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவு கேட்கப்படும். இந்த கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கிறார்.

அதேநேரம் கடந்த காலங்களில் கலந்து கொண்டது போல் பிரதமர் மோடியும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story