நாட்டில் வெறுப்பு அதிகரிப்பதற்கு காரணம் அநீதி - ராகுல்காந்தி
வெறுப்பு மற்றும் வன்முறையை நீக்கி நாட்டை காப்பற்றுவதே எங்களது பயணத்தின் நோக்கம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்காளம், பீகார் வழியாக உத்தரபிரதேசத்துக்குள் அவரது யாத்திரை நுழைந்துள்ளது. இந்தநிலையில் ஆக்ராவில் ராகுல்காந்தி பேசியதாவது:-
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி., மூலம் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, விவசாயிகள் இன்னும் தெருக்களில் அமர்ந்திருக்கிறார்கள். மக்களுக்கு உழைக்க வேண்டியது அரசின் கடமை. இதனை மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.
உங்கள் சொந்த நலனைப் பற்றி சிந்திக்கத் துவங்குங்கள் என்பதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அக்னி பாத் திட்டத்தில் ராணுவத்தில் பணிபுரியும் இளைஞர்களின் நிதி நிலை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமாக இருக்கும்.
இளைஞர்களுக்கு வேலை வழங்க விரும்பாததால், அரசு வேலை தேடுபவர்களின் நேரத்தை வீணடிப்பதே பா.ஜ.க. அரசின் நோக்கம். நாட்டில் வெறுப்பு அதிகரிப்பதற்கு காரணம் அநீதி.
இந்தியாவில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதிக்கு எதிராக பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை துவங்கி உள்ளேன். வெறுப்பு மற்றும் வன்முறையை நீக்கி நாட்டை காப்பற்றுவதே எங்களது பயணத்தின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.