மாதம் ரூ.90,000 வருமானம்; சாலையோர பிரியாணிக்கடையில் ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு
சாலையோர பிரியாணிக்கடையில் ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தி கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
லக்னோ
உத்தரபிரதேசத்தில் அனைத்து கடை உரிமையாளர்களிடமும் ஜிஎஸ்டி எண்கள் மற்றும் டெபாசிட் வரி வசூலிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அரசின் இந்த உத்தரவால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நேற்று காலை ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் 5 பேர் கொண்ட குழு பாலுகஞ்ச் சென்றனர். அங்கு டீக்கடைகள் மற்றும் சாலையோர 30-40 பிரியாணி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் கடைகளில் விசாரணை நடத்தி கடையில் சராசரியாக ஒரு நாளைக்கு விற்கும் பணம் மற்றும் பிரியாணியின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் விற்பனையை மதிப்பீடு செய்தனர்.
அதைத்தொடர்ந்து பிரியாணி விலை மற்றும் மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வைத்து அதிகாரிகள் அங்கு நடந்த விற்பனையை கணக்கிட்டனர்.விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிரியாணியையும் எடைபோட்டனர். இதையடுத்து, அனைவருக்கும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கபட்டது. ஜிஎஸ்டி பதிவு எண் மற்றும் பில் உருவாக்கி பிரியாணி விற்பனை செய்ய உத்தரவிட்டனர்.
ஒரு விற்பனையாளர் பொதுவாக காலை முதல் இரவு வரை இரண்டு தேக்சா ( சட்டி) பிரியாணி விற்பார். பிரியாணியின் சில்லறை விலை கிலோவுக்கு 200 முதல் 250 ரூபாய் வரை. ஒரு பாத்திரத்தில் 20-25 கிலோ பிரியாணி இருக்கும். கடைக்காரர் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை எந்த வரியும் இல்லாமல் விற்பனை செய்கிறார். இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு கடைக்காரரும் ஒவ்வொரு மாதமும் 75 முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் என கூறப்படுகிறது.