அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்


அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்
x

ராணுவப் பணியின்போது வீரமரணமடைந்த ‘அக்னிவீரர்’ அஜய்-யின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே ரூ.98.39 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீரர் திட்டத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அக்னிவீரர் திட்டத்தில் சேருபவர்களை அரசாங்கம் உபயோகப்படுத்திக்கொண்டு தூக்கி எறிகிறது என்றார். மேலும் உயிர்த்தியாகம் செய்த அக்னிவீர் வீரரை 'தியாகி' என்று அழைக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த அக்னி வீரர் அஜய்-யின் குடும்பத்தினருக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மக்களவையில் ராகுலின் உரையின்போது குறுக்கிட்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், பணியில் உயிரிழக்கும் வீரா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது என்றும் ராகுல் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது என்றும் கூறினார். இந்நிலையில், அஜய் மறைவுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்ற அவரது தந்தை கூறுவதைப் போன்ற வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும், 'அக்னிவீரா் இழப்பீடு விவகாரம் தொடா்பாக மக்களவையில் தவறான தகவல்களைத் தெரிவித்த ராஜ்நாத் சிங், அக்னி வீரா்களிடமும் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என தெரிவித்தார்.

இந்த நிலையில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இந்திய ராணுவம் நேற்று வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், 'அக்னிவீரா் அஜய்யின் தியாகத்துக்கு ராணுவம் மரியாதை செலுத்துகிறது. அக்னிவீரா் உள்பட வீரமரணமடையும் அனைத்து வீரா்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு மிக விரைவாக வழங்கப்படுவதை ராணுவம் வலியுறுத்துகிறது. அஜய் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகிறது. வீரரின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கு ஏற்கெனவே ரூ.98.39 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.. அக்னிபத் திட்ட விதிகளின்படி, வீரா் குடும்பத்தினருக்கு இன்னும் செலுத்தப்பட வேண்டிய மீதி தொகையான ரூ.67 லட்சமும் காவல் துறை சரிபாா்ப்புக்கு பின் விரைவில் வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story