ஈத்கா மைதானத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு


ஈத்கா மைதானத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி:  ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து   சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
x

ஈத்கா மைதானத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கலாம் என்று கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நாளை(செவ்வாய்க்கிழமை) விசாரணை நடக்கிறது.

பெங்களூரு: ஈத்கா மைதானத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கலாம் என்று கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நாளை(செவ்வாய்க்கிழமை) விசாரணை நடக்கிறது.

ஈத்கா மைதானம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் ஈத்கா மைதானம் உள்ளது. அங்கு முஸ்லிம் சமூகத்தினர், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை அன்று தொழுகை நடத்துகிறார்கள். இந்த நிலையில் அந்த மைதானம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. கர்நாடக வக்பு வாரியம், அது தங்களுக்கு சொந்தமானது என்று கூறியது.

இதை நிராகரித்த பெங்களூரு மாநகராட்சி, அந்த மைதானம் மாநில அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று கூறியது. இதை எதிர்த்து வக்பு வாரியம் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

தொழுகை நடத்தலாம்

அந்த வழக்கில் நீதிபதி, ஈத்கா மைதான விஷயத்தில் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதாவது முஸ்லிம்கள் ரம்ஜான், பக்ரீத் அன்று தொழுகை நடத்தலாம், அவற்றை விளையாட்டுக்கு பயன்படுத்தலாம் என்றும், இதை தவிர வேறு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கிடையாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

மேல்முறையீடு

இதை எதிர்த்து அரசு தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஈத்கா மைதானத்தில் ஆன்மிக-கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு கோரப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று ஆன்மிக-கலாசார நிகழ்ச்சிகளை அனுமதிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கலாம் என்று அந்த அமர்வால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக வக்பு வாரியம் சார்பில் வக்கீல் கபில்சிபல் மேல்முறையீடு மனுவை தலைமை நீதிபதி அமர்வில் நேற்று தாக்கல் செய்தார்.

நாளை விசாரணை

பின்னர் அவர் வாதிடுகையில், "ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலைகைள வைத்து வழிபட அனுமதிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கலாம் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. அந்த மைதானத்தில் முஸ்லிம் சமூகத்தின் கடந்த 60 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வருகிறார்கள்.

ஒருவேளை விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கினால் அது மத மோதலுக்கு வழிவகுக்கும். அதனால் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து நாளை (அதாவது இன்று) விசாரணை நடத்துவதாக கூறினர். அதன்படி இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.


Next Story