ஆசிட் வீச்சில் தப்பி பிழைத்து, சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் 95.2% பெற்று மாணவி சாதனை


ஆசிட் வீச்சில் தப்பி பிழைத்து, சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் 95.2% பெற்று மாணவி சாதனை
x
தினத்தந்தி 14 May 2023 2:36 PM IST (Updated: 14 May 2023 2:51 PM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் சிறு வயதில் ஆசிட் வீச்சில் தப்பி பிழைத்த மாணவி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் 95.2% பெற்று சாதனை படைத்து உள்ளார்.

சண்டிகார்,

அரியானாவின் சண்டிகர் நகரில் வசித்து வரும் தம்பதி பவன் மற்றும் சுமன். இவர்களின் மகள் கைபி (வயது 15). சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் கைபி, 95.2% மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.

அவர் பள்ளியிலேயே முதல் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். பார்வையற்றோர் பள்ளியில் படித்துள்ள அவர், சிறு வயதில் சில நபர்களின் திடீர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர். 3 வயது இருக்கும்போது, ஆசிட் வீச்சில் கைபி கடுமையாக பாதிக்கப்பட்டார்.

அவரது பெற்றோர், எல்லா இடங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் கைபியின் பார்வையை திருப்பி கொண்டு வரமுடியவில்லை.

எனினும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்து, பள்ளி அளவில் சாதனை படைத்து உள்ளார். இதுபற்றி மாணவி கைபி கூறும்போது, ஹிசார் கிராமத்தில் இருந்தபோது, நடுத்தர வயதுடைய 3 பேர் ஆசிட் வீசினர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டேன். அவர்கள் 3 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின், 2 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்.

ஆனால், அவர்களின் தாக்குதலால் பறிபோன பார்வை எனக்கு கிடைக்கப்பெறவில்லை என வேதனை தெரிவித்து உள்ளார்.

ஒரு நாளைக்கு 5 முதல் 6 மணிநேரம் வரை படிப்பேன். எனது பெற்றோரும், ஆசிரியர்களும் நிறைய ஊக்கம் அளித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று அவர் கூறியுள்ளார்.

நான் எனது பெற்றோரையும், ஆசிரியரையும் பெருமைப்பட செய்வேன் என்று மாணவி கைபி கூறியிருக்கிறார்.

அரியானா செயலகத்தில் பியூன் வேலையில் கைபியின் தந்தை பணியாற்றி வருகிறார். சாஸ்திரி நகரில் அவரது குடும்பம் வசித்து வருகிறது. கைபியின் படிப்புக்காக கிராமத்தில் இருந்து சண்டிகருக்கு அவரது பெற்றோர் புலம்பெயர்ந்து சென்றனர்.

எவரோ சிலர் செய்த தவறால், இந்த மாணவி பாதிக்கப்பட்டும், விடாமுயற்சியுடன் படித்து அவரது பெற்றோரையும், ஆசிரியரையும் பெருமைப்பட செய்து, மற்றவர்களுக்கும் நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக உள்ளார்.


Next Story