கஜோல், கத்ரீனாவை தொடர்ந்து... டீப்பேக் வீடியோவில் சிக்கிய யோகி ஆதித்யநாத்
வலைதளம் வழியே மருந்து வாங்குபவர்களை கடவுள் கவுரவிப்பார் என்று உ.பி. முதல்-மந்திரி பேசுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.
புதுடெல்லி,
சமூக ஊடகங்களின் தாக்கம் நாட்டில் அதிகரித்து விட்டன. நமக்கு வேண்டியவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளவும், சாட்டிங், புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை பகிரவும் அவை பயன்படுகின்றன. இதற்கு தொழில் நுட்ப வளர்ச்சி அதிகம் கைகொடுக்கிறது.
இந்த தொழில் நுட்பத்தின் வழியே பலன் கிடைப்பதுடன் பாதிப்புகளும் ஒருபுறம் ஏற்படுகின்றன. இதன் விளைவே இந்த டீப்பேக் வீடியோவாகும். டீப்பேக் என்பது, உண்மையான நபர்களோடு வேறொருவரின் முக அமைப்பை தொடர்புப்படுத்தி போலியான வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை உருவாக்குவது ஆகும். பின்னர் அவை சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
இதனால், தொடர்புடையவர்களின் அந்தரங்கம் பாதிக்கப்படுகிறது. மனஉளைச்சலையும் ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப் ஆகியோரின் டீப்பேக் வீடியோக்கள் வெளிவந்தன. இதற்கு அவருடைய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன்பின்னர், நடிகை கஜோலின் டீப்பேக் வீடியோ ஒன்று வெளிவந்தது. அதில், அவர் ஆடையை மாற்றுவது போன்ற காட்சிகள் இருந்தன. இந்த நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கரின் டீப்பேக் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இதன் தொடர்ச்சியாக, போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்து இருந்தது.
இதுபோன்று பல பிரபலங்கள் டீப்பேக் வீடியோ பாதிப்புக்கு ஆளான நிலையில், அந்த வரிசையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் சேர்ந்திருக்கிறார். அதில் அவர், டயாபடீஸ் பாதிப்புக்கான மருந்துகளை விளம்பரப்படுத்துவது போன்ற காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. செயற்கை தொழில் நுட்பம் (ஏ.ஐ.) உதவியுடன் உருவான 41 விநாடிகள் ஓட கூடிய அந்த வீடியோவில் தோன்றிய அவர், இந்த மருந்து, இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை வலைதளம் வழியே வாங்குபவர்களை கடவுள் கவுரவிப்பார் என்று பேசுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.
கிரேஸ் கார்சியா என்ற பேஸ்புக் கணக்கில் இருந்து இந்த வீடியோ பகிரப்பட்டு உள்ளது. இதனை 2.25 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் பகிர்ந்து உள்ளனர். இதேபோன்று, இந்தியாவில் டயாபடீஸ் வெற்றி பெற்று உள்ளது. டயாபடீசுக்கு குட்பை சொல்வோம் என்றும் அதில் பகிரப்பட்டு உள்ளது.
ஐ.டி. சட்டம், 2008-ன் சட்ட பிரிவு 66 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வீடியோ பகிரப்பட்ட கிரேஸ் கார்சியா என்ற பேஸ்புக் கணக்கிற்கு எதிராக எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.