தபால்துறையில் 28 ஆண்டுகள் கழித்து சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டால் வேலை வாய்ப்பு பெற்ற நபர்..!


தபால்துறையில் 28 ஆண்டுகள் கழித்து சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டால் வேலை வாய்ப்பு பெற்ற நபர்..!
x

தபால்துறை பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகள் கழித்து, சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டால் ஒருவர் அப்பணியை பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 1995-ம் ஆண்டு, அங்குர் குப்தா என்பவர் தபால் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தார். அவர் 15 நாட்களுக்கான புதுமுக பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், பின்னர் அவரது பெயர், 'மெரிட்' பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. 'இன்டர்மீடியட்' படிப்பை தொழிற்கல்வி பாடமுறையில் அவர் முடித்தார் என்ற காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட அங்குர் குப்தா, தன்னைப்போல் நீக்கப்பட்ட வேறு சிலருடன் சேர்ந்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 1999-ம் ஆண்டு, அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.

அதை எதிர்த்து, 2000-ம் ஆண்டு, அலகாபாத் ஐகோர்ட்டில் தபால் துறை மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை 2017-ம் ஆண்டு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை 2021-ம் ஆண்டு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தபால் துறை மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அங்குர் குப்தாவுக்கு பணி வழங்க உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"ஒரு விண்ணப்பதாரர், பணி நியமனத்தை வகுக்கப்பட்ட உரிமையாக கோர முடியாது. இருப்பினும், அவர் பெயர் 'மெரிட்' பட்டியலில் இடம்பெற்று விட்டால், அவர் நியாயமாக நடத்தப்படுவதற்கான குறைந்தபட்ச உரிமை உள்ளது. வேலை கொடுக்கும் நிறுவனம், எந்த காரணமும் இல்லாமல், ஒரு விண்ணப்பதாரரை தன்னிச்சையாக தூக்கி எறிய அதிகாரம் இல்லை. அங்குர் குப்தா தகுதியற்றவர் என்று தபால்துறை முடிவு செய்ததில் தவறு உள்ளது.

ஆகவே, அவரை தபால் உதவியாளர் பணியில் ஒரு மாதத்துக்குள் நியமிக்க வேண்டும். தகுதிகாண் பருவத்தை அவர் முடித்த பிறகு, அவரது பணித்திறனில் திருப்தி இருந்தால், அவரது பணியை நிரந்தரம் ஆக்கலாம். திருப்தி இல்லாவிட்டால, சட்டப்படி செயல்படலாம்.

அதே சமயத்தில், இத்தனை ஆண்டுகள் அங்குர் குப்தா உண்மையிலேயே பணியில் இல்லாததால், அவர் சம்பள நிலுவைத்தொகையோ, பணிமூப்போ கோர தகுதியற்றவர்."

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Next Story