ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்; மிசோரமில் நடப்பு ஆண்டில் 4,848 பன்றிகள் உயிரிழப்பு


ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்; மிசோரமில் நடப்பு ஆண்டில் 4,848 பன்றிகள் உயிரிழப்பு
x

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு மிசோரமில் கடந்த ஆண்டில் 33,417 பன்றிகள் உயிரிழந்து ரூ.60.82 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.



அய்சாவல்,



மிசோரம் மாநிலம் மேற்கே வங்காளதேசம் மற்றும் கிழக்கே மியான்மர் நாட்டுடன் சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டின் பிப்ரவரியில் மிசோரமில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியது.

இதனை தொடர்ந்து பன்றிகள் மற்றும் அது சார்ந்த இறைச்சி பொருட்கள் இறக்குமதியை மிசோரம் அரசு ஏப்ரலில் தடை செய்தது. கடந்த ஆண்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு மிசோரமில் 33,417 பன்றிகள் உயிரிழந்து ரூ.60.82 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதுதவிர, காய்ச்சல் பரவாமல் தடுக்க அதே ஆண்டில் மொத்தம் 10,910 பன்றிகள் கொல்லப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து எந்த காய்ச்சலும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் 4,848 பன்றிகள் உயிரிழந்து உள்ளன என மிசோரம் விலங்குகள் வளர்ப்பு மற்றும் கால்நடை துறை நேற்று தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பினால் 39 பன்றிகள் உயிரிழந்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த இதுவரை 4,077 பன்றிகள் கொல்லப்பட்டு உள்ளன. இதனால், மிசோரமின் 11 மாவட்டங்களில் இதுவரை 9 மாவட்டங்களில் உள்ள 68 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், மாநில பேரிடராக இது அறிவிக்கப்படும் என அத்துறைக்கான மந்திரி, டாக்டர் பெய்ச்சுவா கூறியுள்ளார்.


Next Story