சுவர்ண விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற வக்கீல்கள்
தங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற கோரி பெலகாவி சுவர்ண விதான சவுதாவை வக்கீல்கள் முற்றுகையிட முயன்றனர்.
பெலகாவி:
தங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற கோரி பெலகாவி சுவர்ண விதான சவுதாவை வக்கீல்கள் முற்றுகையிட முயன்றனர்.
வக்கீல்கள் ஊர்வலம்
கர்நாடகத்தில் சமீபகாலமாக வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் வக்கீல்களை பாதுகாக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது வக்கீல்களை பாதுகாக்க அரசு சட்டம் இயற்றும் என்று வக்கீல்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர்.
ஆனால் சட்டத்தை இயற்ற கர்நாடக சட்டத்துறை மந்திரி மாதுசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த வக்கீல்கள் நேற்று பெலகாவி சுவர்ண சவுதா முன்பு செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுவர்ண விதான சவுதாவை முற்றுகையிட முயன்றனர்.
மந்திரி பேச்சுவார்த்தை
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், வக்கீல்களை விதான சவுதா நுழைவுவாயில் முன்பு தடுப்பு கம்பிகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் வக்கீல்கள் தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றனர். இதனால் போலீசார், வக்கீல்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. இந்த சந்தர்ப்பத்தில் சுவர்ண விதான சவுதா நுழைவுவாயில் கேட்டில் ஏறி வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
மேலும் மந்திரி மாதுசாமி வர வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போராட்டம் நடத்திய வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முதல்-மந்திரியிடம் பேசுவதாக அவர் வக்கீல்களுக்கு உறுதி அளித்தாா. இதனை ஏற்றுக்கொண்ட வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.