6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்


6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
x

கோப்பு படம் (பிடிஐ)

தினத்தந்தி 23 Feb 2024 10:50 AM IST (Updated: 23 Feb 2024 11:29 AM IST)
t-max-icont-min-icon

3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய கொள்கை நாடு முழுவதும் கடந்த கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு பிரீ கேஜி முதல் 2-ம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையை தமிழகம் உள்பட சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. இந்த சூழலில் 2024-25-ம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில், பிரீ கேஜிக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், எல்கேஜி எனில் நான்கு வயதும், யுகேஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 1-ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு 5 என்ற பழைய நடைமுறையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story