பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடை எதிர்க்கும் வழக்கில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
புதுடெல்லி,
பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்வது அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகுமா என்ற வழக்கை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
ஏற்கனவே இந்த வழக்கில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ரவிவர்மா குமார், பி.வில்சன், மீனாட்சி அரோரா, சஞ்சய் பரிக், கே.எஸ்.சவுகான், வக்கீல் சதன் பராசத் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர். தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நபாடே ஏற்கனவே ஆஜராகி வாதாடினார்.
பொருளாதார ரீதியில் நலிவுற்றோர் இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த அவர், பொருளாதார அளவுகோல்கள் வகைப்பாட்டிற்கு அடிப்படையாக இருக்க முடியாது. மேலும் இந்த இடஒதுக்கீடு சரியானது என முடிவு செய்தால் சுப்ரீம் கோர்ட்டு இந்திரா சாவ்னி (மண்டல்) தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வுகளின் வழக்கு விசாரணைகளை செல்போன்கள், மடிக்கணினிகள், கம்ப்யூட்டர்களில் எந்த இடையூறும் இன்றி யூடியூப் சேனலில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.