பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை 24-ம் தேதி ஒத்திவைப்பு


பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை 24-ம் தேதி ஒத்திவைப்பு
x

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ந் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் வங்கிகள் மூலம் புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை கடந்த 2016 நவம்பர் 15 அன்று விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், தலைமையிலான அமர்வு, பணமதிப்பு நீக்கத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்று தெரிவித்திருந்தது.

அரசின் பொருளாதாரக் கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, இந்த விவகாரத்தில் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு அறிக்கை சமர்பிக்காததால் வழக்கை ஒத்திவைக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி வேண்டுகோள் விடுத்தார். தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று கடைசியாக அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் கூறி மனுக்கள் மீதான விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story