சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் 7 மணிநேரம் விசாரணை


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் 7 மணிநேரம் விசாரணை
x

கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் 7 மணிநேரம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு சம்பந்தமாக போலீஸ் நியமன பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீசார், காங்கிரஸ், பா.ஜனதா பெண் பிரமுகர் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக போலீஸ் நியமன பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அம்ருத் பால் பணி இடமாற்றம் செய்யப்பட்டு, உள்நாட்டு பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏற்கனவே அம்ருத் பாலிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தார்கள். இதற்கிடையில், போலீஸ் நியமன பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சாந்தகுமாரிடம் நடத்திய விசாரணையின் போது, போலீஸ் நியமன பிரிவு அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான வினாத்தாள்களில் திருத்தம் செய்யப்பட்டதற்கான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

கூடுதல் டி.ஜி.பி.யிடம் விசாரணை

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலுக்கு சி.ஐ.டி. போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி, சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் முறைகேடு தொடர்பாக 7 மணிநேத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது முறைகேடு சம்பந்தமாக சில முக்கிய தகவல்களை அம்ருத் பால் கூறி இருப்பதாக தகவலக்ள் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மை தான், இந்த விவகாரத்தில் போலீஸ் நியமன பிரிவை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது, ஆனால் முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் அவர் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணை முடிந்ததும் அங்கிருந்து கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் புறப்பட்டு சென்றார்.


Next Story