அண்ணிக்கு வரதட்சணை கேட்டு கொடுமை; நடிகை அபிநயாவுக்கு 2 ஆண்டு சிறை
பெங்களூருவில் அண்ணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் நடிகை அபிநயாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு:
நடிகை அபிநயா மீது வழக்கு
கன்னட திரையுலகிலும், சின்னத்திரையிலும் நடிகையாக இருந்து வருபவர் அபிநயா. இவரது சகோதரர் சீனிவாஸ். இவர், துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா நாரணஹள்ளியை சேர்ந்த லட்சுமிதேவியை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின்பு அவர்கள் பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தனர். அவர்களுடன் நடிகை அபிநயா, அவரது பெற்றோரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்தனர்.
லட்சுமிதேவியை திருமணம் செய்யும்போது, அவரது குடும்பத்தினர் ரூ.80 ஆயிரம், 250 கிராம் தங்க நகைகளை வரதட்சணையாக நடிகை அபிநயாவின் குடும்பத்தினரிடம் கொடுத்திருந்தனர். ஆனால் திருமணத்திற்கு பின்பு கூடுதலாக ரூ.1 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி லட்சுமி தேவியை, சீனிவாஸ், அபிநயா, இவர்களது பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் துமகூருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு லட்சுமி தேவியை அனுப்பி வைத்திருந்தனர்.
சிறை தண்டனை
தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி, சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு கணவர் சீனிவாஸ், நடிகை அபிநயா, மாமியார் ஜெயம்மா, மாமனார் ராமகிருஷ்ணா மற்றும் செல்வராஜ் ஆகிய 5 பேர் மீதும் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், நடிகை அபிநயா உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு கீழ் கோர்ட்டில் சந்திரா லே-அவுட் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த பெங்களூரு கீழ் கோர்ட்டு, கடந்த 2012-ம் ஆண்டு நடிகை அபிநயா, செல்வராஜிக்கு தலா 2 ஆண்டுகளும், சீனிவாஸ் உள்பட 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து பெங்களூரு மாவட்ட கோர்ட்டில் நடிகை அபிநயா மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த கோர்ட்டு, 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.
நடிகைக்கு 2 ஆண்டு சிறை
இந்த தீர்ப்பை எதிர்த்து லட்சுமி தேவி மற்றும் அரசு சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி பிரபாகர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், பெங்களூரு மாவட்ட கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தும், கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதாவது நடிகை அபிநயாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது தாய் ஜெயம்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், செல்வராஜிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனிவாசும், ராமகிருஷ்ணாவும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதில் நடிகை அபிநயாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.