புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா - நடிகர் ரஜினிகாந்த் இன்று பங்கேற்கிறார்
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு சார்பில் கர்நாடக ரத்னா விருது இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கலந்து கொள்கிறார்.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் பவர் ஸ்டார், அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனித்ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். 45 வயதில் அவர் மரணம் அடைந்தது கன்னடர்களை துக்கத்தில் ஆழ்த்தியது.
அவர் திரைத்துறையில் பணியாற்றி கொண்டே, மற்றொருபுறம் சமூக சேவைகளை ஆற்றி வந்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வந்தார். சிறுவயது முதலே திரைப்படங்களில் நடித்து கன்னட திரைத்துறையில் தனக்கு என்று தனி முத்திரை பதித்தார்.
அவரது இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்று, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு விதான சவுதாவின் முன்பகுதி படிக்கட்டுகளில் நடக்கிறது. இதில் அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்குகிறார்.
இந்த விழாவில் கவுரவ விருந்தினர்களாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி, மேல்-சபை தலைவர் ரகுநாத் மல்காபுரே, சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர்., இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சுனில்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், பி.சி.மோகன் எம்.பி., ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
கர்நாடகத்தில் இதுவரை 9 பேருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10-வது நபராக புனித் ராஜ்குமாருக்கு மறைவுக்கு பிந்தைய நிலையில் இந்த விருது வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் 1992-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.