கர்நாடகத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும்-வாட்டாள் நாகராஜ் பேட்டி


கர்நாடகத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும்-வாட்டாள் நாகராஜ் பேட்டி
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறினார்.

பெங்களூரு:-

நடிகர் ரஜினிகாந்த்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு நடைபெற்றது. இந்த நிலையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் கன்னட அமைப்பினர் கலந்து கொண்டனர். முதல்-மந்திரியின் இல்லத்தை நோக்கி செல்ல முயற்சி செய்த வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.

அப்போது வாட்டாள் நாகராஜ் கூறுகையில், 'எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து 29-ந் தேதி (நாளை) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்துகிறோம். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்துகிறோம். நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு வந்து செல்கிறார். அவா் இங்கு இருந்தபோது காவிரி நீர் குடித்துள்ளார். அதனால் அவர் காவிரி பிரச்சினையில், கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சருடன் பேச வேண்டும். கர்நாடகத்தின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்' என்றார்.

முழு அடைப்புக்கு ஆதரவு

அதைத்தொடர்ந்து வாட்டாள் நாகராஜ், திறந்த வாகனத்தில் ரோடு, ரோடாக சென்று 29-ந் தேதி நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்குமாறும், அன்றைய தினம் கடைகளை மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த முழு அடைப்புக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. இதனால் தலைநகர் பெங்களூரு மீண்டும் முடங்கும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.

நாளைய தினம் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் நடைபெறும் தேர்வு வேறு ஒரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட உள்ளது.


Next Story