மாடு திருட்டு வழக்கில் 20 வயதில் தலைமறைவான நபரை 57 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த போலீஸ்


மாடு திருட்டு வழக்கில் 20 வயதில் தலைமறைவான நபரை 57 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த போலீஸ்
x

மாடு திருட்டு வழக்கில் 20 வயதில் தலைமறைவான நபரை 57 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

மாடு திருட்டு வழக்கில் 20 வயதில் தலைமறைவான நபரை 57 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகத்தில் அரங்கேறிய இந்த சுவாரசிய சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

மாடு திருட்டு வழக்கு

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கியை சேர்ந்தவர் மல்லிதராவ் குல்கர்னி. விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு சொந்தமான 2 எருமை மாடுகள், ஒரு கன்றுக்குட்டியை கடந்த 1965-ம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுதொடர்பாக மல்லிதராவ் குல்கர்னி, பால்கி மகாகர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடியதாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கிஷன் சந்தர், கணபதி விட்டல் வாக்மோர் ஆகிய 2 பேரை கைது செய்து இருந்தனர்.

தலைமறைவு

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இதற்கிடையே மாடு திருட்டு வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர்களில் முதல் குற்றவாளியான கிஷன் சந்தர் 2006-ம் ஆண்டு இறந்துபோனார். இதுபற்றி அறிந்த மகாகர் போலீசார், 2-வது குற்றவாளியான கணபதி விட்டல் வாக்மோரை தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.

77 வயதில் பிடிபட்டார்

இந்த நிலையில் அவர் மராட்டிய மாநிலம் லத்தூர் அருகே தகலகான் கிராமத்தில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று நேற்று முன்தினம் கணபதி விட்டல் வாக்மோரை கைது செய்தனர்.

மாடு திருட்டு வழக்கில் 1965-ம் ஆண்டு கணபதி விட்டல் வாக்மோர் கைதான போது அவருக்கு வயது 20. சில மாதத்திலேயே ஜாமீனில் வந்த அவர் 57 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில் 77 வயதில் அவரை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story