மரத்தில் சரக்குவேன் மோதல்; பெண்கள் உள்பட 6 பக்தர்கள் நசுங்கி சாவு


மரத்தில் சரக்குவேன் மோதல்; பெண்கள் உள்பட 6 பக்தர்கள் நசுங்கி சாவு
x

பெலகாவி அருகே, ஆலமரத்தில் சரக்கு வேன் மோதிய கோர விபத்தில் சிறுமிகள், பெண்கள் உள்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

பெலகாவி:

பெலகாவி அருகே, ஆலமரத்தில் சரக்கு வேன் மோதிய கோர விபத்தில் சிறுமிகள், பெண்கள் உள்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

எல்லம்மா கோவில்

பெலகாவி மாவட்டம் சவதத்தியில் பிரசித்தி பெற்ற சவதத்தி எல்லம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான மராட்டியம், ஆந்திராவில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது சவதத்தி எல்லம்மா கோவிலில் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் வடகர்நாடகம், மராட்டியத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

வேன்கள், பஸ்கள், சரக்கு ஆட்டோ, சரக்கு வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். அதுபோல பல்வேறு இடங்களிலும் இருந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கோவிலுக்கு நடந்தே வருகிறார்கள். இந்த நிலையில் சவதத்தி எல்லம்மா கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா உலகுந்து என்ற கிராமத்தை சேர்ந்த 23 பக்தர்கள் நடைபயணமாக நேற்று முன்தினம் மாலை உலகுந்துவில் இருந்து சவதத்திக்கு புறப்பட்டனர்.

5 பேர் நசுங்கி சாவு

நேற்று அதிகாலை 1 மணியளவில் 23 பேரும் ராமதுர்கா தாலுகா சுஞ்சனூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேனை நிறுத்திய டிரைவர், பாதயாத்திரை சென்ற பக்தர்களிடம் குழந்தைகள் நிறைய பேர் இருப்பதால் குறைந்த வாடகையில் கொண்டு சென்று சவதத்தி கோவிலில் விடுவதாக கூறினார். இதனால் குழந்தைகள் உள்பட 23 பேரும் அந்த சரக்கு வேனில் ஏறினர்.

புறப்பட்ட 5 நிமிடத்தில் அந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரமாக இருந்த ஆலமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வேன் சுக்குநூறாக நொறுங்கி போனது. இந்த விபத்தில் சரக்கு வேனின் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

டிரைவரின் அலட்சியம்

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கடகோலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 19 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோகாக் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் 2 சிறுமிகள், 3 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர். காயமடைந்த 18 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலியான 6 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெயர்கள் அனுமவ்வா (வயது 25), தீபா (31), சவிதா (16), சுப்ரிதா (11), மாருதி (42), இந்திரவவ்வா (24) என்று தெரியவந்தது.

23 பேர் பயணித்தனர்

படுகாயம் அடைந்த 18 பேரின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. விபத்து நடந்த இடத்தில் பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் எம்.பாட்டீல் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 7 பேர் செல்ல வேண்டிய சரக்கு வேனில் 23 பேர் பயணித்து உள்ளனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். அதிக பாரம், டிரைவரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. படுகாயம் அடைந்த 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

இந்த நிலையில் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்துள்ளார்.

படுகாயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார். கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெலகாவியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story