சந்திரபாபு நாயுடுவுக்கு காவல் நீட்டிப்பு
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்தன.
அதாவது திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சந்திரபாபு நாயுடுவிடம் விசாரிக்க ஊழல் தடுப்பு படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சந்திராபாபு நாயுடுவை காவலில் எடுக்கும் நோக்கத்தில் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது வழக்கு தொடர்பாக நிறைய விஷயங்களை விசாரிக்க வேண்டி உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவுக்கு போலீஸ் காவல் வழங்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு சந்திரபாபு நாயுடு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் உத்தரவை இன்று ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது சந்திரபாபு நாயுடுவை ஒரு வாரகாலம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மாறாக சந்திரபாபு நாயுடுக்கு மேலும் 2 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இன்றைய தினம் சந்திராபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில் அவரது நீதிமன்ற காவல் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த 2 நாட்கள் சிறையிலேயே இருக்க வேண்டும்.