13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 25 வார கருவை கலைக்க அனுமதி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 25 வார கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
பெங்களூரு:
25 வார கரு
கர்நாடகத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவளை, வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். தற்போது அந்த சிறுமியின் வயிற்றில் 25 வார கரு வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்பு நடந்து வந்தது.
இந்த நிலையில் மனு மீதான இறுதி விசாரணையின் போது நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், சிறுமியின் எதிர்காலம் கருதி அவளது வயிற்றில் வளரும் 25 வார கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்த சிறுமிக்கு வாணி விலாஸ் ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு செய்ய வேண்டும். இதற்கு ஏற்படும் செலவை அரசே ஏற்க வேண்டும்.
அரசு ஏற்க வேண்டும்
சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யும் மருத்துவர் கூறினால் கருவை டி.என்.ஏ. பரிசோதனைக்காக மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். டி.என்.ஏ. பரிசோதனை தேவைப்பட்டால் கருவை பெங்களூரு அல்லது ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மனுதாரர், அவரது குடும்பத்தினரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும். மனுதாரருக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரை செய்தால் மனுதாரரின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் என்றார்.