மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறும் முடிவை கைவிடுங்கள்


மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறும் முடிவை கைவிடுங்கள்
x

மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறும் முடிவை கைவிட வேண்டும் என்று காங்கிரசிடம் பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

பெங்களூரு:-

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

60 ஆயிரம் பேர்

மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெற காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. திப்பு சுல்தானின் மதமாற்ற கொள்கைக்கு ஏற்றபடி இந்த அரசு செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சி பி.எப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக உள்ளதா?. 30 லட்சம் முதல் 40 லட்சம் இந்துக்கள் பண ஆசை காட்டி மதமாறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த மதமாற்ற சட்டத்தை வாபஸ் பெறும் முடிவை காங்கிரஸ் அரசு யாருக்காக எடுத்துள்ளது. கட்டாய மதமாற்றம் சரியானது அல்ல என்று மகாத்மா காந்தியே கூறியுள்ளார். குடகில் திப்பு சுல்தான் சுமார் 60 ஆயிரம் பேரை மதம் மாற்றினார்.

பள்ளி பாடத்திட்டங்கள்

அதனால் மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறும் முடிவை காங்கிரஸ் அரசு கைவிட வேண்டும். ஒரு சமுதாயத்தை திருப்திப்படுத்தவே இந்த சட்டத்தை அரசு வாபஸ் பெறுகிறது.

பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற இந்த அரசு அவசரகதியில் முடிவு எடுத்துள்ளது. பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பாடத்திட்டத்தை மாற்றினால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். மின்சார டெபாசிட் தொகை 65 சதவீதம் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். மத்திய அரசு அரிசி கொடுக்கவில்லை என்று காங்கிரசார் குற்றம்சாட்டுகிறார்கள். அன்ன பாக்கிய திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பே அரிசி எப்படி கொள்முதல் செய்ய போகிறோம் என்பது பற்றி அவா்களுக்கு தெரியாதா?. மின் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story