டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி - பாஜக எம்.எல்.ஏ.க்கள் விடியவிடிய போராட்டம்
டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்கள் விடிய விடிய ஒருவரையொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி போராட்டம் நடத்தினர்.
டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா கடந்த 2016 ஆம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவராக இருந்தபோது ரூபாய் 1,400 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகளை மாற்றுமாறு தனது ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஊழல் புகாரில் சிக்கிய மந்திரிகள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது டெல்லி லெப்டினன்ட் கவர்னர் பணமோசடி செய்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியதற்கு பாஜக, செய்தியாளர் கூட்டத்தில் பதிலடி கொடுத்தது.
மதுபானக் கொள்கை மற்றும் டெல்லி பள்ளிகளின் கட்டுமானத்தில் செய்த ஊழல் பற்றிய கேள்விகளுக்கு ஆம் ஆத்மி பதிலளிக்காமல் திசை திருப்புகின்றனர் என்று பாஜகவினர் கூறினர்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மகாத்மா காந்தி சிலை அருகே அமர்ந்த நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் பகத் சிங், ராஜ் குரு, சுக்தேவ் ஆகியோரின் சிலைகள் அருகே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாடல்கள் பாடியும், முழக்கங்களை எழுப்பியும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கக் கோரி பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் குதித்தனர்.
திங்கள் மற்றும் வெள்ளியன்று நடைபெற்ற டெல்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தின் நடவடிக்கைகளில் பாஜகவின் எட்டு எம்எல்ஏக்களும் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.