ஆம்ஆத்மி திகாரில் மசாஜ் சென்டரை திறந்து, பாலியல் குற்றவாளியை 'பிசியோதெரபிஸ்ட்' ஆக மாற்றியுள்ளது - ஜேபி நட்டா தாக்கு
ஆம்ஆத்மி கட்சி திகார் சிறையில் மசாஜ் சென்டரை திறந்து, பாலியல் குற்றவாளியை பிசியோதெரபிஸ்டாக மாற்றியுள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 4-ந்தேதி டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பா.ஜ.க. மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி காணப்படுகிறது. டெல்லி மாநகராட்சி பகுதிகளில் இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வஜிர்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், டெல்லி மக்கள் வரவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர். ஆம் ஆத்மியின் செயல்பாடுகளால் பொதுமக்கள் அலுத்துப்போய், பாஜகவை பாராட்டி வருவதாக ஜேபி நட்டா தெரிவித்தார்.
ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் சத்யேந்திர ஜெயின் இன்று ஊழல் வழக்கில் சிறையில் இருக்கிறார். அவர்கள் திகார் சிறையில் ஒரு மசாஜ் சென்டரை திறந்து, பாலியல் குற்றவாளியை பிசியோதெரபிஸ்டாக மாற்றியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திகார் சிறையில் உள்ள டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ சமீபத்தில் வெளியானது. சிறையில் அவருக்கு அளிக்கப்பட்டது மசாஜ் அல்ல அது பிசியோதெரபி சிகிச்சை என துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியோ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.