டெல்லி மாநகராட்சி பார்க்கிங் கட்டண வசூலில் முறைகேடு - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பார்க்கிங் கட்டண வசூல் முறைகேடு காரணமாக மாநகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சுமத்தி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சியில் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சுமத்தி உள்ளது.
இது குறித்து ஆம்ஆத்மி மாநகராட்சி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் கூறுகையில், "டெல்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியின் போது, பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் கெடுக்கப்பட்டது. அப்போது மக்களிடமிருந்து அந்த நிறுவனம் சுமார் 1.5 கோடி ரூபாய் கட்டணமாக வசூலித்தது.
ஆனால் வசூலிக்கப்பட்ட தொகை மாநகராட்சிக்கு வந்து சேரவில்லை. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சியை ஏமாற்றுவதற்காக வேறு பல நிறுவனங்களை தொடங்கினார்கள். இதன் காரணமாக மாநகராட்சிக்கு சுமார் 6 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் நிறுவனங்கள் பணத்தை மாநகராட்சிக்கு திருப்பி தரவில்லை. இந்த விவகாரம் குறித்து லெப்டினன்ட் கவர்னர் விசாரிக்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. டெல்லி மாநகராட்சி தனது பார்க்கிங் இடங்களை வணிகரீதியாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் உரிமத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், எந்த காரணமும் இல்லாமல், 6 கோடி ரூபாய் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தெரிவித்துள்ளது.
டெல்லி மாநகராட்சிக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.