'கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் டெல்லி மேயர் தேர்தலை நடத்த வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு


கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் டெல்லி மேயர் தேர்தலை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு
x

டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

புதுடெல்லி,

250 இடங்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடந்தது. 7-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது.

இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன.

மேயர் தேர்தல் ஒத்திவைப்பு டெல்லி மாநகராட்சி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 6 மற்றும் 24-ந்தேதி நடக்க இருந்தது. ஆனால் 10 மூத்த உறுப்பினர்களுக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மேயர் தேர்தல் நடைபெறாமல், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று 3-வது முறையாக நடந்த கூட்டத்திலும் பா.ஜனதா-ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே அமளி ஏற்பட்டது. ஆனால் மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.


Next Story