டெல்லி மதுபான கொள்கை வழக்கு - ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
டெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஆக இருப்பவர் சஞ்சய் சிங். 2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சில டீலர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கடுமையாக மறுத்தது. பின்னர் இந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. மேலும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு டெல்லி கவர்னர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை சோதனை நடத்தினர். மேலும் அவரது வேலையாட்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சோதனையின்போது ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், பாராளுமன்றத்தில் அதானி குழுமம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியதால், அமலாக்கத்துறை எங்களது ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங்கை குறிவைத்துள்ளது. அதானி விவகாரத்தில் அவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார், அதனால்தான் அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இதற்கு முன்னர் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. தற்போது அப்படித்தான் எந்தவித ஆதாரமும் கிடைக்காது, என்று அவர் கூறினார்.