4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்த இளம்பெண்


4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்த இளம்பெண்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 27 Jan 2024 3:35 PM IST (Updated: 27 Jan 2024 4:27 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இளம்பெண் ஒருவர் கடந்த 2 வருடங்களாக அனாதையாக இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்துவருகிறார்.

புதுடெல்லி,

தற்போதைய காலத்தில் ஏழ்மை நிலையில் உள்ள தனது உறவினர்களுக்கு கூட இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்ய சிலர் முன்வருவதில்லை. ஆனால் உரிமை கோரப்படாத உடல்களுக்கு ஒரு பணியாக தன் சொந்த செலவில் மனமுவந்து இறுதிச்சடங்கு செய்கிறார் டெல்லியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர்.

ஷாஹ்தரா பகுதியில் வசிக்கும் பூஜா ஷர்மா என்ற இளம்பெண், நீண்ட காலமாக மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் பல உடல்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது; "கடந்த இரண்டு ஆண்டுகளில், குடும்பம் அல்லது உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளேன்.

30 வயதான எனது மூத்த சகோதரர் ஒரு சிறிய சண்டையில் என் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தியைக் கேட்டதும், என் தந்தை, கோமா நிலைக்கு சென்றார். தனது சகோதரனுக்கான இறுதிச்சடங்குகளை நானே செய்தேன். அப்போதிருந்து இந்த சேவையை செய்து வருகிறேன்.

ஆரம்பத்தில் குடும்பங்கள் அல்லது இருப்பிடம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற நான் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டேன். அதன் பின்னர் இப்போது காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகள், உரிமை கோரப்படாத உடல்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் என்னைத் தொடர்புகொள்கின்றன.

இறுதிச்சடங்குகள் செய்ய சுமார் 1,000 முதல் 1,200 ரூபாய் வரை ஆகும். நான் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் தங்கியிருக்கிறேன். எனது தந்தை கோமாவில் இருந்து விடுபட்டு தற்போது டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணிபுரிகிறார். எனது தாத்தாவின் ஓய்வூதியத்தில், நான் இவற்றை செய்து வருகிறேன்.

இந்த பணிகளை செய்வதற்காக பல சவால்களை எதிர்கொண்டு வருகிறேன். நான் செய்யும் வேலையை பலர் தடையாகப் பார்க்கிறார்கள். என்னை சந்திக்க விடாமல் என் நண்பர்களை அவர்களின் குடும்பத்தினர் தடுக்கின்றனர். மேலும், இந்த பணிகளை செய்வதால் எனது திருமணத்திற்கும் பல தடைகள் வருகின்றன." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story