திருமண நிச்சய நாளில் கடத்தப்பட்ட இளம் பெண் மருத்துவர் நள்ளிரவில் மீட்பு
திருமண நிச்சயம் செய்யவிருந்த நாளில் 60 பேர் கும்பலால் கடத்தப்பட்ட இளம் பெண் மருத்துவரை பேச முடியாத நிலையில் போலீசார் மீட்டு 22 பேரை கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லா என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வைஷாலி (வயது 24). மருத்துவராக உள்ளார்.
இந்த நிலையில், இவரது வீட்டுக்கு திடீரென 60 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடி விட்டு, படுக்கையறையில் இருந்த பெண் மருத்துவரை காரில் கடத்தி சென்று விட்டது.
அவர்களை தடுக்க முயன்ற பெற்றோரையும் அந்த கும்பல் கம்புகள், கட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. இதில், அவரது தந்தை படுகாயமடைந்து உள்ளார். சாலையில் இருந்த கார் ஒன்றும் தாக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி ரச்சகொண்டா கூடுதல் காவல் ஆணையாளர் சுதீர் பாபு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காதல் விவகாரத்தில் வைஷாலியை கடத்தியிருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தொழிலதிபர் ஒருவர் மீது பெண்ணின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த நிலையில், பெற்றோரை தொடர்பு கொண்ட வைஷாலி நலமுடன் உள்ளேன் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து, போலீசார் பாதுகாப்புடன் மகளை பார்ப்பதற்காக அவரது தந்தை சென்றுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நவீன் ரெட்டி உள்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவீனுக்கும், வைஷாலிக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடந்து விட்டது என கூறப்படுகிறது. ஆனால், அதனை கலைத்து விட்டு வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க வைஷாலியின் பெற்றோர் விரும்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
பெற்றோர் விருப்பப்படி, வேறொருவரை திருமணம் செய்ய வைஷாலி சம்மதம் தெரிவித்து, நவீனுடனான உறவை முறித்து கொண்டுள்ளார். இதன்பின்பு, தேநீர் கடை உரிமையாளரான நவீன், அடிபட்லாவில், வைஷாலியின் வீட்டுக்கு முன்னால் தனது மற்றொரு கிளையை தொடங்கி உள்ளார்.
இந்த சூழலில், நேற்று வைஷாலிக்கு திருமண நிச்சயம் நடைபெற முடிவானது. இதனை அறிந்த நவீன், 60 பேர் கொண்ட கும்பலுடன் வைஷாலி வீட்டுக்கு திரண்டனர். அவர்களில் 20 பேர் வீட்டுக்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டனர்.
40 பேர் வீட்டை அடித்து, நொறுக்கி, வைஷாலியை வால்வோ மற்றும் பொலீரோ கார்களில் வந்திருந்த கும்பல் கடத்தி சென்றுள்ளது. அடையாளம் தெரியாமல் இருக்க சி.சி.டி.வி. கேமிராக்களை அடித்து நொறுக்கியுள்ளது.
முதலில், அண்டை வீட்டுக்காரர்கள் கொடுத்த அவசர தகவலை போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர் என கூறப்படுகிறது. இதன்பின்பே, கடைசியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
8 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்பு, இந்த கும்பலிடம் சிக்கிய வைஷாலியை நேற்று நள்ளிரவில் போலீசார் மீட்டனர். அவரை அடித்து, தாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. இதனால், குழம்பிய நிலையில் இருந்த அவரால் பேச முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.