சொத்துக்காக உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொல்ல முயன்ற பெண்


சொத்துக்காக உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொல்ல முயன்ற பெண்
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவியில் சொத்துக்காக உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொல்ல முயன்ற பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பியையும் போலீசார் கைது செய்தனர்.

பெலகாவி :-


விவசாயி

பெலகாவி மாவட்டம் சவதத்தி அருகே கோராபாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பகீரப்பா. இவரது மகன் நிங்கப்பா ஹமானி(வயது 35). விவசாயியான இவரது பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவரது மனைவி சாவக்கா(32). கடந்த 11-ந் தேதி காலை வழக்கம்போல் நிங்கப்பா தனது விவசாய தோட்டத்திற்கு புறப்பட்டார். அப்போது அவருக்கு சாவக்கா, காலை உணவாக உப்புமா செய்து கொடுத்தார்.

அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நிங்கப்பா வயிற்று வலியால் துடித்தார். இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து நிங்கப்பாவை மீட்டு சிகிச்சைக்காக தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிங்கப்பா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது

நேற்று அவரது ரத்தம், வயிற்றுப்பகுதி ஆகியவற்றின் பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் நிங்கப்பா, விஷம் கலந்த உணவை சாப்பிட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் பட்டில் நேரடியாக நிங்கப்பாவின் மனைவி சாவக்காவிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அவர், தனது தம்பி லட்சுமண் சிந்தோகி(30) என்பவருடன் சேர்ந்து சொத்துக்காக கணவன் நிங்கப்பாவை கொலை செய்திட திட்டமிட்டதும், அதற்காக உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்ததும் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் சாவக்கா, லட்சுமண் சிந்தோகி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நிங்கப்பாவுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சவதத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story