பெங்களூருவில் காவலாளியை கொல்ல முயன்ற பெண்ணால் பரபரப்பு
பெங்களூருவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அசாம் காவலாளியை குத்திக் கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
விவேக்நகர்:-
திருமணம் செய்யாமல் சேர்ந்து...
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜோகிஸ். இவர், பெங்களூருவில் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாமை சேர்ந்த ஜன்டிதாஸ் என்ற பெண்ணுடன் ஜோகிசுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஜன்டிதாசுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. அவருக்கு 18 வயதில் மகளும் உள்ளார். தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு பெங்களூரு புறநகர் ஜிகினியில் அவர் தங்கி இருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் தான் ஜோகிசுக்கும், ஜன்டிதாசுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி இருக்கிறது. பின்னர் பெங்களூரு விவேக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவியாக ஜோகிசும், வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் ஜன்டிதாசின் மகளும் தங்கி இருந்துள்ளார்.
பெண் கைது
இதற்கிடையில், ஜன்டிதாசுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஜோகிசுக்கு பிடிக்காமல் போய் இருக்கிறது. இதனால் அவரை பிரிந்து தனியாக வாழ அவர் முடிவு செய்திருக்கிறார். தான் பணம் கொடுப்பதாகவும் தன்னுடன் சேர்ந்து வாழும்படியும் ஜன்டிதாஸ் கூறி வந்துள்ளார். ஆனால் ஜோகிஸ் மறுத்துள்ளார். இதன் காரணமாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த ஜன்டிதாஸ் வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து ஜோகிசை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில், பலத்தகாயம் அடைந்து அவர் உயிருக்கு போராடி உள்ளார். உடனே அங்கிருந்து ஜன்டிதாஸ் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஜோகிசை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து விட்டு தன்னை விட்டு விலக முயன்றதால் ஜோகிசை ஜன்டிதாஸ் கொல்ல முயன்றது தெரிந்தது. இதுகுறித்து விவேக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜன்டிதாசை கைது செய்துள்ளனர்.