குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை
கலசா அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை சுற்றித்திரிகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு:-
காட்டு யானைகள் அட்டகாசம்
கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் மூடிகெரே, கலசா, தரிகெரே உள்ளிட்ட தாலுகாக்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் நிரந்தரமாக இருந்து வருகிறது. காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், காட்டு யானைகள் தொடர்ந்து கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் காட்டு யானைகள் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வனப்பகுதியையொட்டி வசிக்கும் மக்கள் பீதியில் தான் இருந்து வருகிறார்கள்.
குடியிருப்பு பகுதியில்...
இந்த நிலையில், கலசா தாலுகா கணபதிகட்டே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் வெளியேறி, விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, கணபதிகட்டே கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சுற்றித்திரிந்தது.
இதனை பார்த்து அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் சுற்றி வந்த காட்டு யானை, அங்கிருந்து சென்றுவிட்டது. யானை சுற்றித்திரிவதை அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். விளைநிலங்களில் மட்டும் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை, குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.
ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
இதுபற்றி அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் கணபதிகட்டே கிராமத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லவில்லை என்பதும், வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் சுற்றித்திரிவதும் தெரியவந்தது. இதனால் கணபதிகட்டே மற்றும் சுற்றுவட்டார மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்த நிலையில், வனத்துறையினர் கணபதிகட்டே மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஜீப்பில் சென்று ஒலிபெருக்கி மூலம் குடியிருப்பு பகுதியில் யானையின் நடமாட்டம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவித்து வருகிறார்கள். மேலும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.