மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது; அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததால் பரிதாபம்


மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது; அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததால் பரிதாபம்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொன்னம்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக செத்தது.

குடகு:

காட்டு யானைகள் அட்டகாசம்

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா குட்டா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து ெவளியேறி, கிராமத்தையொட்டி உள்ள காபி தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

மின்சாரம் தாக்கி செத்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி காபி தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கு காபி தோட்டத்தில் சென்ற 11 கிலோ வாட் மின்வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் சென்ற அந்த யானை, மின்வயரை மிதித்ததாக தெரிகிறது. இதனால் காட்டு யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.

இதுபற்றி அறிந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

செஸ்காம் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பின்னர் சம்பவ இடத்துக்கு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு யானைக்கு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதேப்பகுதியில் காட்டு யானையின் உடல் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது 45 வயது நிரம்பிய ஆண் யானை ஆகும். அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து செத்துள்ளது என்றார்.

இதற்கிடையே, அந்தப்பகுதி மக்கள் செஸ்காம் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது, செஸ்காம் அதிகாரிகள் அடிக்கடி இதுபோன்று அலட்சியமாக செயல்படுவதாகவும், தற்போது யானை ஒன்று செத்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story