தனியார் பஸ்சை ஓட்டிய வாலிபரால் பரபரப்பு; பயணிகள் உயிர் தப்பினர்
பத்ராவதி அருகே சாலையோரம் நிறுத்தி இருந்த தனியார் பஸ்சை, வாலிபர் ஒருவர் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.
சிவமொக்கா;
தனியார் பஸ்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒளேஒன்னூர் அருகே தனியார் பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் மாலை சென்றது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மல்லாப்புரா அருகே சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர் கீழே இறங்கி கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் வாலிபர் ஒருவர் திடீரென பஸ்சில் ஏறி டிரைவர் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் அவர், ஸ்டியரிங்கை பிடித்து திருப்பி பஸ்சை தட்டு தடுமாறி ஓட்டியுள்ளார்.
இதைப்பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்து உயிர்பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். மேலும் பஸ் செல்வதை பார்த்து டிரைவரும், கண்டக்டரும் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்துள்ளனர்.
இதையடுத்து பஸ்சில் இருந்த சில பயணிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தி வாலிபரை மடக்கி பிடித்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக பஸ் விபத்துக்குள்ளாகாமல் பயணிகளும், சாலையில் சென்றவர்களும் உயிர் தப்பினர்.
இதையடுத்து வாலிபருக்கு, பயணிகள் தர்ம-அடி கொடுத்தனர். இதுபற்றி ஒளேஒன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மனநலம் பாதித்தவர்
அதில் சாலையோரம் நிறுத்தி இருந்த தனியார் பஸ்சை ஓட்டிய வாலிபர், மனநலம் பாதித்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர், தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா நியாமதி டவுனை சேர்ந்த கரிபசப்பா(வயது 35) என்பதும், மனநலம் பாதித்தவர் என்பதால் பொதுஇடங்களில் சுற்றிதிரிந்து வந்துள்ளார்.
அதன்படி அவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பஸ், லாரிகளை ஓட்டி வந்துள்ளார். இதேபோல் நேற்றுமுன்தினமும் சாலையோரம் நின்ற தனியார் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது.
இதையடுத்து கரிபசப்பாவை, போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்புஏற்பட்டது.