விளைநிலத்தில் விழுந்து நொறுங்கிய ஆளில்லா குட்டி விமானம்


விளைநிலத்தில் விழுந்து நொறுங்கிய ஆளில்லா குட்டி விமானம்
x

சித்ரதுர்காவில் சோதனையின்போது ஆளில்லா குட்டி விமானம் விளைநிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

பெங்களூரு:-

ஆளில்லா குட்டி விமானம்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா குடாப்பூர் பகுதியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ராணுவத்துக்கு தேவையான ஆளில்லா குட்டி விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.ஆர்.டி.ஓ. சார்பில் 'தபஸ் யு.ஏ.வி.' என்ற ஆளில்லா குட்டி விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த ஆளில்லா குட்டி விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

விளைநிலத்தில் விழுந்து நொறுங்கியது

அப்போது அந்த ஆளில்லா குட்டி விமானம் இரியூர் தாலுகா வட்டிகெரே கிராமத்தில் வான்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள விளைநிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், இதுபற்றி டி.ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் குட்டி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதிர்ஷ்டவசமாக ஆளில்லா குட்டி விமானம் விழும் போது அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு வந்து ஆளில்லா குட்டி விமானத்தை பார்க்க திரண்டனர். ஆளில்லா குட்டி விமானம் விழுந்து நொறுங்கி கிடப்பதை சிலர் வீடியோ, படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த விபத்து ராணுவ அமைச்சகத்திடம் விவரித்து வருவதாகவும், இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story